Publish Date: Wed, 12 Dec 2007 (17:58 IST)
Updated Date: Wed, 12 Dec 2007 (17:58 IST)
நமது நாட்டில் பின்தங்கிய மாநிலங்களான ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்கான எல்லா உதவிகளையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐ.நா. வழங்க உள்ளது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு உதவிக் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளுக்காக ஜார்கண்ட், பீகார் ஆகியவற்றுடன் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த 7 மாநிலங்களிலும் 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரை நடக்கும் எல்லா மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஐ.நா.வின் அமைப்புகள் தேவையான உதவிகளை வழங்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு அரசுடன் இணைந்து மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ராஞ்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா. இருப்பிட ஒருங்கிணைப்பாளரும், உறுப்பு அமைப்புகளின் தலைவருமான மாக்சின் ஓல்சன் கூறினார்.
வளர்ந்து வரும் நாடுகளில் மேம்பாட்டுப் பணிகளில் தொழில்நுட்ப ரீதியாகவும், நேரடியாகவும் உதவிகளை வழங்குவதற்காக, 2008 ஆம் ஆண்டிற்கு மட்டும் 11 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட உள்ள ஐ.நா. அமைப்புகளில் யுனிசெஃப், யு.என்.டி.பி., உலக சுகாதார நிறுவனம், உலக உணவு நிறுவனம் ஆகியவையும் அடக்கம்.