போலி என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
சொராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் ஷேக் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், குற்றம்சாற்றப்பட்டுள்ள நரேந்திர மோடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
குஜராத்தில் தற்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் மோடிக்கு எதிராக தாக்கீது அனுப்ப வேண்டிய சூழ்நிலை இல்லை என்று மாநில அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ருபாபுதீன் ஷேக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மற்றும் கூடுதல் அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியன் இருவரும் தங்கள் வாதத்தில், நீதிமன்ற அவமதிப்புக்காக தாக்கீது அனுப்ப வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர்.
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில், அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, போலி மோதலில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசினார்.
"சொராபுதீன் போன்றவர்களுக்கு எப்படிப்பட்ட முடிவு அமைய வேண்டுமோ அதுதான் நடந்துள்ளது. அதற்காக என்னை என்ன செய்ய முடியும். தூக்கில் போட்டுவிடுவீர்களா?" என்று மோடி ஆவேசமாகப் பேசினார்.
சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது போலி மோதலில்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக குஜராத் அரசே காவல்துறை அதிகாரிகளை பதவிநீக்கம் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் பதவி வகிக்கும் மோடி அதனை நியாயப்படுத்திப் பேசியது அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.