பீகாரில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து 2 இடங்களில் ரயில் பாதைகளை மாவோயிஸ்டுகள் தகர்த்துள்ளனர்.
கடந்தவாரம், பங்கா மாவட்டத்தில் 3 காவலர்களைக் கொன்ற குற்றத்திற்காக 5 மாவோயிஸ்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தச் சதிச் செயலை நிகழ்த்தியுள்ளனர்.
மத்திய கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட பலுய் நிலையம் அருகில் நள்ளிரவு 2 மணிக்கு ரயில் பாதை தகர்க்கப்பட்டது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருந்தாலும், பாட்னா- ஹவுரா இடையில் 15 முக்கிய ரயில்களின் போக்குவரத்து இன்று காலைவரை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிறிது நேரத்தில் கஜ்ரா-யுரெய்ன் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரயில் பாதையில் வெடிகுண்டு வெடித்தது. சத்தம் கேட்டு சுதாரித்த உள்ளூர் மக்கள் சரியான சமயத்தில் காவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் விரைந்து வந்த காவலர்களும், ரயில்வே ஊழியர்களும் ரயில் பாதையைச் சீரமைத்தனர்.
ரயில் பாதைகளைக் குறிவைத்து மாவோயிஸ்டுகள் நடத்தும் தாக்குதலால் ஆண்டுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மத்திய கிழக்கு ரயில்வே பொது மேலாளர் சந்திரா தெரிவித்தார்.