நாகாலாந்தில், ஆளும் நெய்பியு ரியோ தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, நாளை நடக்கவுள்ள ஒரு நாள் சட்டப் பேரவைக் கூட்டத்தில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாகாலாந்து ஜனநாயக கூட்டணியில் முக்கியக் கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணி அக்கூட்டணியில் இருந்து விலகியது, அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அமைச்சர்கள் அரசிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பதவி விலகியது ஆகிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் நாளை காலை நடக்கவுள்ள 10 ஆவது நாகாலாந்து சட்டப் பேரவையின் 16 ஆவது கூட்டத்தில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரும் போது, ஆளும் நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மேலும் சில கட்சிகள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது.
அதேநேரத்தில், சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அவைத் தலைவர் கியானிலி பெசெயி அனுமதி அளிப்பதைப் பொறுத்துதான் எந்த மாற்றமும் ஏற்படும்.
மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்ட நாகாலாந்து சட்டப் பேரவையில் 5 உறுப்பினர்கள் பதவி விலகி விட்டதால் தற்போது 55 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
இதில் ஆளும் கட்சியிடம் 35 உறுப்பினர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடம் 19 உறுப்பினர்களும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் உள்ளனர்.