பிரதமர் வேட்பாளராக அத்வானியை பா.ஜ.க. தேர்வு செய்துள்ளது பற்றி பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கருத்துகள், விரக்தியாலும் ஏமாற்றத்தாலும் பாதிக்கப்பட்ட அவரின் மனநிலையைக் காட்டுகிறது என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, "பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அத்வானியின் பெயர் அறிவிக்கப்பட்டதை அறிந்து பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். ஏனெனில் அத்வானிக்கு நிகரான தலைவர் காங்கிரசில் இல்லை" என்றார்.
மேலும், "பிரதமரிடம் இருந்து இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு வழிகாட்டுதல்களையோ உத்தரவுகளையோ கொடுக்கும் இடத்தில் அவர் இல்லை.
இடதுசாரிகளின் தொடர்ந்த அச்சுறுத்தல்களால் மத்திய அரசைத் தொடர்ந்து நடத்த முடியாத நெருக்கடி காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ள பிரதமர் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார்" என்றும் அவர் கூறினார்.
நரேந்திர மோடி பற்றி வெங்கய்யா நாயுடு கூறுகையில், குஜராத் மோடியின் பகுதி. அங்குள்ள ஒவ்வொருவரும் மோடியை விரும்புகிறார்கள் என்றார்.