புது டெல்லி அருகே பள்ளியில் மாணவனைச் சுட்டுக் கொன்ற, சகமாணவர்கள் 2 பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களின் பெற்றோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
டெல்லி அருகே உள்ள குர்கானில் ``யூரோ சர்வதேச பள்ளி'' என்ற புகழ்பெற்ற பள்ளி இருக்கிறது. அங்கு, அபிஷேக் தியாகி (14) என்ற மாணவர், 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவருடன், ரியல் எஸ்டேட் அதிபரின் மகன்கள் விகாஸ், ஆகாஷ் ஆகிய 2 பேர் படித்து வந்தனர். இவர்களுக்கிடையில் சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பிற்பகலில், வகுப்புகள் முடிந்து மாணவர்கள் புறப்பட்டனர். மாணவன் அபிஷேக், வகுப்பறைக்கு வெளியில் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது விகாஸ், ஆகாஷ் ஆகிய 2 மாணவர்களும், அபிஷேக்கிடம் சென்று தகராறு செய்தனர். இதில், அபிஷேக்கை, 2 மாணவர்களும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 5 குண்டுகள் சுடப்பட்டன. இதில், 4 குண்டுகள் அபிஷேக்கின் நெற்றி, மார்பு ஆகிய பகுதிகளில் பாய்ந்தன.
இந்த நிகழ்வு பற்றி அறிந்த ஆசிரியர்கள் ஓடோடி வந்தனர். படுகாமடைந்த மாணவன் அபிஷேக்கை, உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால், வழியிலேயே அபிஷேக் இறந்து விட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அபிஷேக்கை சுட்டுக்கொன்றதாக, விகாஷ், ஆகாஷ் ஆகிய 2 மாணவர்களையும் கைது செய்தனர்.
இந்த மாணவர்களுக்கு, கைதுப்பாக்கி கிடைத்தது எப்படி? அந்த துப்பாக்கியின் லைசென்சு யார் பெயரில் இருக்கிறது? என்பது போன்ற விவரங்களை காவலர்கள் விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், ''துப்பாக்கியின் லைசென்சுதாரரிடமும், மாணவர்களிடமும், கைதான மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரித்து வருகிறோம். மாணவர்கள் இரு பிரிவாக இயங்கி வந்ததாகவும், இதுவே இந்த கொலைக்கு காரணம் என்றும் தெரிய வந்து இருக்கிறது'' என்றார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் பெற்றோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.