நரேந்திர மோடி மீதான பயமே பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக அத்வானியின் பெயரை அறிவிக்க காரணம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல் வாக்குபதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் பதவிக்கு போட்டியாக நரேந்திர மோடி வந்து விடுவாரோ என்ற அச்சத்தில், பா.ஜ.க. அவசர அவசரமாக கட்சியின் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானியின் பெயரை அறிவித்துள்ளதாக வதோதராவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்றும், வரும் 16 -ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளநிலையில் நேற்று பா.ஜ.க. அக்கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அத்வானியின் பெயரை அறிவித்தது. குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மோடி அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றால், அடுத்து பிரதமர் பதவிக்கு போட்டியாக வந்து விடுவார் என்று பா.ஜ.க. வில் உள்ள பலதலைவர்களுக்கு பயம் உள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும் மோடியின் புகழ் பாடுவதாகவே அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. அக்கட்சியின் ஒரு சில முக்கியத் தலைவர்கள் மட்டும் பிரச்சாரத்திற்காக சில நாட்கள் குஜராத்திற்கு சென்று மோடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அத்வானியின் பெயர் பிரதமர் வேட்பாளர் பொறுப்புக்கு அறிவிக்கப்பட்ட நேரம் பலரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளது.
இந்நிலையில் வதோதராவில் நடைப்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் , குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் என்ற நிலைக்கு போட்டியாக நரேந்திர மோடி வந்துவிடுவாரோ என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக அக்கட்சி நேற்று பிரதமர் வேட்பாளராக கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே.அத்வானியின் பெயரை அறிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
மோடியிடமிருந்து வரும் மிரட்டல் எதிர்காலத்தில் என பா.ஜ.க. அஞ்சுவதால் தான், குஜராத் தேர்தலுக்கு முன்பாகவே அடுத்த நாடாளுமன்றத்துக்கான பிரதமர் வேட்பாளராக அத்வானியின் பெயரை அறிவிக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு இப்போதே ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.