அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை நிறைவு செய்வதற்கு, நமது நாட்டில் பெருமளவில் உள்ள தோரியம் வளத்தை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்தியாவில் யுரேனியம் மிகக் குறைவாக இருந்தாலும், தோரியம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அதை எரிசக்தித் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
"இன்றைய காலகட்டத்தில் அதிவேக ஈனுலைகளை மேம்படுத்தும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இது எரிசக்தித் தட்டுப்பாட்டை நிச்சயமாகக் குறைக்கும்.
அதேநேரத்தில், எந்தவொரு கண்டுபிடிப்பும் சாதாரண மக்களுக்குப் பயன்படும்போதுதான் வெற்றிபெறுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்றும் அவர் கூறினார்.
மேலும், "நமது பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்குகின்றன. ஆனால் தொழில்நுட்ப மேம்பாட்டில் பின்தங்கி உள்ளன. தொழில் நிறுவனங்களில் இந்நிலை தலைகீழாக உள்ளது.
இதனைச் சரிசெய்ய, தொழில் துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் மிகப் பெரிய ஒத்துழைப்பு தேவைப்படுகிறது" என்றார் சிதம்பரம்.