நமது நாட்டில் கிராமங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை எடுத்துச் செல்வதற்குப் பயன்படும் ஜிசாட்-4 செயற்கைக் கோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பத்தின் எல்லா அம்சங்களும் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை மாறி, குக்கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் இஸ்ரோவின் முயற்சிகள் அமைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ஜிசாட்-4 (GSAT-4) என்ற பரீட்சார்த்த முறையிலான தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தச் செயற்கைக் கோள் முழுமையாக செயல்படத் தொடங்கினால் சுமார் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதியுடன் கூடிய தொலைபேசி வசதியை வழங்க முடியும். இதற்காக KA-band எனப்படும் புதிய வகை அலை ஏற்பிகள் அதில் பொறுத்தப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இன்று தொடங்கிய சர்வதேச மின்னணு அறிவியல் மாநாட்டில் பேசிய இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஜிசாட்-4 செயற்கைக் கோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் முதல்கட்டமாக 1,400 கிராமங்களுக்கு டிஜிட்டல் முறையிலான தகவல் தொடர்பு வசதிகளை வழங்க முடியும் என்றும் அதன் பின்னர் இணையதள வசதிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் வகையில் நமது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட மாதவன் நாயர், தொழில்நுட்ப வருகையைக் கண்டறிந்து ஏற்றுக்கொண்டு உதவும் மனப்பக்குவம் அனைவருக்கு வரவேண்டும் என்றார்.
நான்கு நாட்கள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விஞ்ஞானிகள் 60 ஆய்வு அறிக்கைகளையும், 5 ஆய்வு மாதிரிகளையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.