குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 87 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு சிறுசிறு வன்முறை நிகழ்வுகளுக்கு இடையில் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க. 87 தொகுதிகளிலும் போட்டியிடும் வேளையில், காங்கிரஸ் 82 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
காலையில் வாக்குப் பதிவு மிகவும் மந்தகதியில் நடந்தது. நண்பகல் வரை செளராஷ்டிரா பகுதியில் 25 விழுக்காடும், தெற்கு குஜராத்தில் 20 விழுக்காடும் வாக்குப் பதிவு நடந்தது.
நண்பகலுக்குப் பிறகு வாக்குப் பதிவில் விறுவிறுப்பு கூடியது. மதியம் 2.30 மணி வரை 87 தொகுதிகளிலும் 35 முதல் 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன.
ராஜ்காட் பகுதியில் இன்று காலை பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின்பேரில் போர்சாத் பகுதியில் இருந்து 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
இதேபகுதியில் கடந்த 9 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் சிறுமி ஒருத்தி கொல்லப்பட்டாள். 7 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்காட் பகுதியில் மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா தனது வாக்கை முதலில் பதிவு செய்தார். ஆனால், முதல்வர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்துவரும் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் வாக்களிக்கவில்லை.
ராஜ்காட்டில் 3 இடங்களிலும், போர்பந்தரில் 2 இடங்களிலும், ஜெட்பூரில் ஒரு இடத்திலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்பதால் பா.ஜ.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர்.
இத்தேர்தலில் 2,500 க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் பிரெய்ல் உதவியுடன் வாக்களித்தனர்.
பா.ஜ.க. வெற்றிபெற வாய்ப்பு அதிகம்: கருத்துக் கணிப்பு!
முதல்கட்டத் தேர்தல் நடந்த 87 தொகுதிகளிலும் ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. மீண்டும் குறைந்த வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று தெரியவந்துள்ளது.
குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 12 இடங்களை இழந்து 115 இடங்களையும், காங்கிரஸ் 13 இடங்களைப் பெற்று 64 இடங்களையும், மற்றவர்கள் 3 இடங்களையும் பெறுவார்கள் என்று அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இன்று தேர்தல் நடந்த 87 தொகுதிகளில் பா.ஜ.க. 48 இடங்களையும், காங்கிரஸ் 37 இடங்களையும், மற்றவர்கள் 2 இடங்களையும் பெறுவார்கள் என்றும் கருத்து கணிப்பு கூறுகிறது.