குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க.வினரை 'மரண வியாபாரிகள்' என்று விமர்சித்ததற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய தாக்கீதுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பதிலளித்துள்ளார்.
அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி விவரம் எதுவும் தெரியவில்லை. இருந்தாலும், 'மரண வியாபாரிகள் என்று கூறியது மோடியை அல்ல. ஆட்சியாளர்களைத்தான்' என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹிந்து பயங்கரவாதம் பற்றிய பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், ஹிந்துக்களுக்கு எதிரானவர் சோனியா காந்தி என்று கூறியதற்காக பா.ஜ.க. தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோருக்கு அனுப்பப்பட்ட தாக்கீதுகளுக்கும் அவர்கள் பதிலளித்துள்ளனர்.
போலி என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய தாக்கீதுக்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அளித்துள்ள விளக்கத்தில், ''ஆட்சியாளர்களை மரண வியாபாரிகள் என்று விமர்சித்த சோனியா காந்தி, குஜராத்தில் ஹிந்து பயங்கரவாதம் பரவியுள்ளதாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகியோரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று குற்றம்சாற்றி இருந்தார்.