மக்களவைக்கு எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று பா.ஜ.க. கருதுவதால், தனது கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக எல்.கே.அத்வானியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
புது டெல்லியில் நேற்று நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், மக்களவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளதாக கூறினார்.
தற்போதைய அரசியல் நிலவரம், பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து விவாதிக்க நடந்த இக் கூட்டத்தில் அத்வானி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
அணு ஒப்பந்த பிரச்சனையில் சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேசக் கூடாது என்றும், தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் ஜனவரியில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக வேண்டும் என்றும் இடதுசாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.