இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்திவரும் பேச்சு டிசம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் அண்மையில் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐ.மு.கூ. -இடதுசாரிகள் உயர்மட்டக் குழு கூட்டத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளபடி, சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சு முடிந்தவுடன், அதன் முடிவு உயர்மட்டக் குழுவுக்குத் தெரிவிக்கப்படும்" என்றார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்துவதற்காக வியன்னா சென்றுள்ள இந்தியக் குழுவினர் இந்த மாத இறுதிக்குள் தங்களின் பேச்சை முடித்துவிட்டு இறுதி முடிவுடன் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தைப் பார்க்கும்போது அணுசக்தி ஒப்பந்தத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறித்து கேட்டதற்கு, "வாக்கெடுப்பில்லாத விவாதம் நடந்துள்ள நிலையில் அப்படிச் சொல்ல முடியாது" என்றார்.