நீதித்துறை தனது எல்லையைத் தாண்டக்கூடாது என்றும், நீதிபதிகள் அரசை வழிநடத்திச் செல்ல முற்படுவது விபரீதமாகிவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
”நீதித்துறை தனது எல்லையைக் கடந்து செயல்படுவதாக கூறப்படுகிறது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.மாத்தூர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.“நீதிபதிகள் தங்களின் வரையரைகளைத் உணர்ந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அரசை நடத்திச் செல்ல முனைப்புக் காட்டக் கூடாது” என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
”நீதிபதிகள் பணிவுடனும், தன்னடக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மாமன்னர்களைப் போல நடந்துக் கொள்ளக் கூடாது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் - நாடாளுமன்றத்துக்கு என்று பரந்துப்பட்ட அதிகார பகிர்வை வரையறுத்துள்ளது.
நீதித்துறை பிற துறைகளுக்கு மதிப்பளிப்பதுடன், ஒருவர் மற்றொருவரின் அதிகார எல்லைக்குள் ஆக்கிரமிக்க முயற்சி செய்யக் கூடாது. அண்மைக் காலமாக நீதிமன்றங்கள் தங்கள் நிலையிலிருந்து விலகி நிர்வாக வரம்புக்குள் அல்லது அரசின் கொள்கை முடிவுகளில், உறுதியாகச் சொல்ல முடியாது, ஆனால் தலையிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது” என்று நீதிபதிகள் கூறினர்.
அண்மைக் காலத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். வயது, மழலையர் பள்ளி சேர்க்கை, அனுமதி பெறாத பள்ளிகள், பள்ளிகளில் இலவச இடங்கள், பள்ளிகளுக்கு குடிநீர் விநியோகம், மருத்துவமனைகளில் எத்தனை இலவச படுக்கைகள், பொது இடங்கள் பயன்பாடு, அவசர பால ஊர்திகளை தவறாகப் பயன்படுத்தியது, சர்வதேச தரத்தினாலான தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் அமைப்பது, டெல்லிவாசிகள் சுவாசிக்கும் காற்றின் நிலை,பொது இடங்களில் பிச்சை எடுப்பது போன்ற வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டினர்.
மேலும் சுரங்க பாதைகளை பயன்படுத்துவது, பேருந்து போக்குவரத்து, டெல்லி நகரில் உள்ள கட்டடங்களுக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது, இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களை இனம் கண்டறிவது, டெல்லி சாலையில் வேகத்தடையின் அளவு, ஆட்டோ ரிக்சாக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அதிகரித்து வரும் டெல்லி சாலை விபத்துக்களின் எண்ணிக்கைத் தொடர்பான வழக்கு, சாலைத் தண்டத் தொகை நிர்ணயம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், மேற்கண்ட அனைத்துப் பிரச்சனைகளும் நிர்வாகம் - சட்டமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டவை என்று தாங்கள் கருதுவதாக கூறியுள்ளனர்.
சட்டம் ஒன்று இருந்தால் அதனை நடைமுறைபடுத்த வேண்டியவர்கள் நீதிபதிகள், மாறாக சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் அவர்களுக்குக் இல்லை என்றும், மேலும் அவ்வாறு சட்டத்தை இயற்றி அதனை அமல் படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மழலையர் பள்ளியில் சேர்க்கைக்கு நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், நேர்முகத் நடத்தக் கூடாது என்று எந்த சட்டத்திலும், நடைமுறைகளிலும் சொல்லப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவு மூலம் ஒரு சட்டத்தை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்த கோரியுள்ளது. இது முழுக்க, முழுக்க சட்டத்திற்கு புறம்பானது,நீதிபதிகள் சட்டத்தை இயற்ற இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1998 -ம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றம் தொடர்பான ஜெகதாம்பிகா பால் வழக்கிலும், 2005 -ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தொடர்பான வழக்கிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்த நெறிமுறைகளுக்குஉட்பட்டு வழங்கப்பட்டுள்ள உதாரணமான தீர்ப்புகள் அவை என்று கூறியுள்ளனர்.
இவ்விரு வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது.நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் - நாடாளுமன்றம் ஆகிய மூன்றுக்கும் இடையிலான இணக்கத்தை தகர்த்துவிடும். நீதித்துறை உத்தரவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா கூறியுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
”நீதிமன்றங்கள் தங்களின் எல்லையைத் தாண்டி விடாதவாறு கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் புனிதமான பணி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் மறந்து விடக்கூடாது. கொள்கை முடிவுகள், நிதி, கல்வி உள்ளிட்ட பிரச்சனைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் நிர்வாகத்தினர் வசம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
போதுமான அளவு அமல்படுத்தும் அதிகாரமும், வசதிகளும் இல்லாத நிலையில், நீதித்துறை பன்முக பொறுப்புகளைக் தனக்குத் தானே உருவாக்கி ஏற்றுக் கொள்ள முற்பட்டால் அது ஆபத்தை விளைவிக்கும். ஒரு கட்டத்தில் நீதித்துறையின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறிக்கு உள்ளாக்கும் தலைகீழான விளைவை உருவாக்கிவிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
நீதித்துறை செயல்பாடுகள் முனைப்புடையதாக இருக்க வேண்டுமே ஒழிய, நீதித்துறையின் சாகசமாக நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மாறிவிடக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதிமன்றங்கள் முன்னெச்சரிக்கையுடன், முறையாக செயல்பட வேண்டும்.நீதிமன்றங்களின் செயல்பாடு ஒன்றும் முறையாக வழிநடத்தப்படாத ஏவகணை அல்ல என்று கூறிய நீதிபதிகள், இதனை நினைவில் வைத்துக் கொள்ளத் தவறினால் அது நம்மை பெரும் குழப்பத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்” என்று எச்சரித்துள்ளனர்.
”பொதுமக்களின் புகழ்ச்சிநீதிபதிகளுக்கு புகழைச் சேர்க்காது, சுய லாபங்களுக்காக நீதிபதிகள் விலை போகக்கூடாது. நீதித்துறையின் செயல்பாடுகளில் அதன் புனிதத் தன்மையும், நம்பகத் தன்மையும் காப்பாற்றபட வேண்டும். நீதிமன்றங்கள் ஒருபோதும் அரசை நடத்த நினைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
”எச்சரிக்கை மணியாக நீதித்துறை செயல்பட வேண்டும். நிர்வாகத்தினர் அவர்களுடைய பணியை நிறைவேற்ற கூடிய சூழ்நிலையை உறுதி செய்துதர வேண்டும். நீதித்துறை மற்ற இரு அமைப்புகளின் விஷயத்தில் தலையிட்டால், அந்த அமைப்புகள் ஒழுங்காகச் செயல்படாதது போல் ஆகிவிடும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியதை மற்ற அமைப்புகள் குற்றச்சாட்டாக நீதித்துறை மீது சுமத்த முடியாதா” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
”சட்டமன்றம் - நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவை முறையாக செயல்படாத நிலையில், அதனைத் திருத்த வேண்டியது பொது மக்களின் கடமையாகும். அடுத்த தேர்தலில் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நினைக்கிறார்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் அல்லது சட்டத்துக்குட்பட்டு அமைதியான முறையில் தங்களுடைய எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்துவார்கள். இதற்கு தீர்வு நீதித்துறை மற்ற துறைகளின் பொறுப்பைக் எடுத்துக் கொள்வதில் இல்லை. அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டும் அல்ல, அதற்குரிய அனுபவமும், வசதிகளும் நீதித்துறையில் இல்லை” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.