நமது நாடு முழுவதும் ஆயுதப் படைகளில் பணியாற்றுவோரின் வாழ்நிலையை மேம்படுத்தவும், ஆயுதப் படையை நவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
உத்ரகண்ட் தலைநகர் டேராடூனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''ஆயுதப் படைகளில் இளம் பெண்களும், இளைஞர்களும் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில், நமது ஆயுதப் படைகளின் தரம் மேம்படுத்தப்படும். வீரர்களின் வாழ்நிலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்றார்.
ஆயுதப் படைகளுக்கு உலகத் தரமான பயிற்சிகள், நவீன ஆயுதங்கள் வழங்குவதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்வதற்கு மத்திய அரசு என்றும் தயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆயுதப்படை வீரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், உடனிருப்பவரைக் கொலை செய்தல், தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.