இணையதள லாட்டரிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கும், மேற்கு வங்கம், சிக்கிம், திரிபுரா ஆகிய 3 மாநில அரசுகளுக்கும் தாக்கீது அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பிபாஸ் கார்மாகர் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே தாக்கல் செய்யப்ட்டுள்ள மற்றொரு மனுவுடன் இதையும் இணைத்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு தெரிவித்தது.
அதேநேரத்தில் இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வரும்போது, மத்திய அரசும் தொடர்புடைய மாநில அரசுகளும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக மனுதாரர் தனது மனுவில், ''அரசுகள் நடத்தும் இணையதள லாட்டரியால் ஏழை மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்'' என்று கூறியுள்ளார்.
மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த தானும் லாட்டரியால் பாதிக்கப்பட்டவன் என்றும், பெரும்பாலான மக்களின் நலன் கருதி அப்பட்டமான சூதாட்டமான லாட்டரியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.