குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் முடிந்துள்ள நிலையில், முதற்கட்டமாக தெற்கு 87 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு டிசம்பர் 11, 16 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ளது.
இன்ற முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச், செளராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் உள்ள 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கிறது.
பா.ஜ.க. 87 தொகுதிகளிலும் போட்டியிடும் வேளையில், காங்கிரஸ் 82 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பெண் வேட்பாளர்கள் 53 பேர் களத்தில் உள்ளனர்.
முதன்மைத் தேர்தல் அதிகாரி வினோத் பாபர், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''செளராஷ்டிராவில் 52 தொகுதிகளும், கட்ச்சில் 6 தொகுதிகளும், தெற்கு குஜராத்தில் 29 தொகுதிகளும் உள்ளன.
முதல்கட்டத் தேர்தலுக்காக 19,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,834 சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும், 1,306 சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
முதல்கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் காவலர்களுடன் மத்திய துணை ராணுவத்தினர் 52,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு பணிகளில் 1.2 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், தேர்தல் பார்வையாளர் பணியில் 3,397 மத்திய அரசு ஊழியர்களும் ஈடுபடவுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 92 தொகுதிகளுக்கு வருகிற 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். இத் தேர்தலில் மொத்தம் 669 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகளிடையில் கடுமையான போட்டி!
முன்னதாகக் கடந்த ஒரு வாரமாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் பொது மேடைகளில் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாற்றுகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் கட்சிகளிடையில் கடுமையான போட்டி நிலவுவதை எடுத்துக் காட்டியுள்ளது.
'சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது நியாயமே' என்று முதல்வர் நரேந்திர மோடியும், குஜராத்தில் ஆளும் ஆட்சியாளர்கள் 'மரண வியாபாரிகள்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூறியதற்காக தேர்தல் ஆணையம் தாக்கீதுகளை அனுப்பியது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல 'சோனியா காந்தி ஹிந்துக்களுக்கு எதிரானவர்' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்கோத்ராவும், 'குஜராத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதம் பரவி விட்டது என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கும் கூறியதற்காகவும் தேர்தல் ஆணையம் தாக்கீதுகளை அனுப்பியுள்ளது.
இதற்கிடையில் பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொண்ட பிரச்சாரம் சூரத், செளராஷ்டிரா பகுதிகளில் காங்கிரசுக்கு பலத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குஜராத் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கும் வேட்பாளர்கள் பட்டியலில், மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா (ராஜ்காட் 2) , நீர்வளத் துறை அமைச்சர் நரோட்டம் பட்டேல் (சொராசி), நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஐ.கே.ஜடேஜா (தரங்தரா), சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் அர்ஜூன் மோத்வாதியா (போர்பந்தர்), நிதியமைச்சக துணையமைச்சர் செளராப் தலால் (பாவ் நகர்) ஆகியோர் உள்ளனர்.
தெற்கு குஜராத்தில் பழங்குடியினர் பகுதிகளில் காங்கிரசும், நகர்ப் புறங்களில் பா.ஜ.க.வும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.