நமது நாட்டில் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் எல்லா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், ராகிங்கின் விளைவுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு, ராகவன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு, ராகிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் போதுமான பயனை அளிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராகிங் தொடர்பான வழக்கு ஒன்றை இன்று விசாரித்த நீதிபதிகள் அர்ஜித் பசாயத், அஃதாப் ஆலம் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு அளித்த இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
கல்வி நிறுவனங்களில் புதிதாகப் படிக்கவரும் மாணவர்களை போதைப் பொருட்களை உட்கொள்ளும்படி வற்புறுத்துதல், உடல்ரீதியாக ஊனமுற்ற மாணவர்களை ராகிங் என்ற பெயரில் துன்புறுத்துதல் ஆகியன உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வகையான புகார்களை ராகவன் குழு ஆய்வு செய்துள்ளது.
இதனடிப்படையில், ராகிங்கைக் கண்டறிந்து தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், கூடுதல் பரிந்துரைகளை ராகவன் குழு வழங்க வேண்டும்.
மேலும், கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே அமலில் உள்ள ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ராகவன் குழு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
இந்தப் பரிந்துரைகளை, இந்திய மருத்துவ கழகம், இந்தியப் பல் மருத்துவக் கழகம், இந்திய செவிலியர் கழகம், மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கடுப்பாட்டில் இயங்கும் வேளாண்மை பொறியியல் கல்லூரிகள், மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.