பெட்ரோல், டீசல் உட்பட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும், கச்சா இறக்குமதி மீதான தீர்வை மற்றும் விற்பனை வரி குறைப்பு குறித்து இந்த வார இறுதிக்குள் ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட உள்ளது. இவைகளின் விலையை அதிகரிப்பது பற்றி ஆலோசனை கூற பிரதமர் மன்மோகன் சிங் சென்ற மாதம் அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார்.
இந்த குழுவிற்கு அயலுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராக உள்ளார். இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, விவசாயம் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாப்பு துறை அமைச்சர் சரத் பவார், பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த அமைச்சர்கள் குழு பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது பற்றி ஆலோசித்து, அதன் அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் வைக்கும். இதன் அடிப்படையில் பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட எந்த விதமான நடவடிக்கை எடுப்பது என்று மத்திய அரசு முடிவு செய்யும்.
பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் வருகின்ற 14 ந் தேதி நடை பெறுகிறது.
இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண் எண்ணெய் ஆகிவைகளின் விலையை எந்த அளவிற்கு உயர்த்துவது என முடிவு செய்யப்படும். இதே போல் இவைகள் மீது விதிக்கப்படும் இறக்குமதி தீர்வை மற்றும் விற்பனை வரி ஆகியவற்றை குறைப்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் எம்.எஸ்.சீனிவாசன் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை ஈடுகட்ட மத்திய அரசு விலையை உயர்த்துவது, வரிகளை குறைப்பது பற்றி ஆலோசித்து வருவதாகத். தெரிவித்தார்.