மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மீது தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் மனு அளித்துள்ளது.
மத்திய அரசின் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள விளம்பரம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திபடுத்தும் வகையில் உள்ளது என்றும் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்றும் பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.
குஜராத் சட்டப்பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், சிறுபான்மையினர் நலன்களுக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம் என்ற தலைப்பில் தேசிய நாளிதழ் ஒன்றில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை குறிப்பிடுவதாக இந்த விளம்பரம் அமைந்துள்ளது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தவிர மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அந்துலே மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.