சோராபுதீன் என்கவுண்டர் தொடர்பான பேச்சுக்கு நரேந்திர மோடி அளித்த விளக்கம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளது.
சோராபுதீன் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி நியாயப்படுத்தி பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு மோடிக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியது.
இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு மோடி நேற்று மாலை விளக்கம் அளித்தார். அதில், குஜராத்தை ஆள்பவர்கள் மரண வியாபாரிகள் என கூறிய சோனியாவின் ஆத்திரமூட்டும் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாகவே தாம் பேசியதாகவும், சோராபுதீன் என்கவுண்டரை தாம் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் தனக்கு அனுப்பிய தாக்கீதை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், மோடி அளித்துள்ள இந்த விளக்கம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுக்க உள்ளது.
மேலும் ' மரண வியாபாரிகள் ' என சோனியா கடந்த டிசம்பர் 1 ம் தேதியன்று,தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சு விவரம் குறித்த விவரங்களை அனுப்புமாறு குஜராத் அரசு நிர்வாத்தை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.