குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்துக்கும், மக்களுக்கும் எதிரான தீயசக்தி என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சியில் நடந்த போலி என்கவுண்டர்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வலிமையான குஜராத் என்ற நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது அவருடைய கற்பனைதானே தவிர, உண்மையான குஜராத்தின் நிலை அவ்வாறு இல்லை.
குஜராத் மாநிலத்தை வலிமையானதாக உருவாக்கியுள்ளதாக நரேந்திர மோடியும், பா.ஜ.க.கூறுவது தொடர்பாக நான் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த பிரச்சனைக் குறித்தும் அவர்களுடன் விவாதிக்கத் தயார்.
குஜராத்தில் உருவாகியுள்ள வளர்ச்சி, மாற்றங்கள் குறித்து விவாதிக்க தயாரா என்று தேர்தல் பொதுக்கூட்டங்களில் எல்லாம் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுத்து வந்த நிலையில், அவரது சவாலைச் சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
விவசாயம், நீர் ஆதாரங்கள், நர்மதா, சுகாதாரம் என வளர்ச்சி தொடர்பான எந்த விசயங்கள் குறித்தும் நாங்கள் விவாதிக்கத் தயார். ஆனால் மோடி இந்த பிரச்சனைகள் எல்லாம் குறித்து விவாதிக்க வரமாட்டார். அவரால் உண்மைக்கு மாறான தவறான புள்ளி விவரங்களை மட்டுமே தர முடியும்.
கடந்த 2005-2006 ஆம் நிதியாண்டில் குஜராத்தின் வளர்ச்சி தொடர்பான சமூக - பொருளாதார ஆய்வில் 12.17 விழுக்காடு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை 2006 - 2007 ஆம் நிதியாண்டில் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 12.17 விழுக்காடு என்றும், இது தேசிய சராசரியை விட அதிகம் என்றெல்லாம் கூறி மக்களைத் மோடி திசைதிருப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் இந்திய பொருளாதார - புள்ளியியல் துறை கணக்கெடுப்புப் படி 8.11 விழுக்காடு என்றும், இது தேசிய சராசரியான 9.4 விழுக்காடைவிட குறைவு என்றும் கூறினார்.
பொதுக் கடனைப் பொறுத்தமட்டில் குஜராத் மாநிலம் அதிக கடனைக் கொண்ட மாநிலமாக உள்ளதாகவும், ஒவ்வொரு குஜராத் மாநிலத்தவர் தலையிலும் 20,000 ரூபாய் கடன் சுமை உள்ளதாகவும், கடந்த 2006 மார்ச் 31 ஆம் தேதி முடிய உள்ள காலத்தில் மாநிலத்தின் கடன் தொகை 66,925.83 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.89 விழுக்காடு ஆகும்.
கடந்த 2006 -ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற போது மாநிலத்தின் கடன் நிலுவைத் தொகையின் அளவு 34,450 கோடியாக இருந்தது. தற்போது நாட்டிலேயே அதிக கடன் சுமை உள்ள மோசமான மாநிலங்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு குஜராத் மக்களின் தலையிலும் 21,000 கடன் சமை உள்ளது. ஆண்டுதோறும் வட்டியாக மட்டும் குஜராத் மாநிலம் 6,242 கோடி ரூபாய் வட்டிச் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்நிய முதலீடுகளைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் குஜராத் மாநிலத்தின் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தேர்தல் மேடைகளில் நரேந்திர மோடி முழங்கி வருவதாகவும், ஆனால் அந்நிய முதலீட்டை கவருவதில் குஜராத் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பதாகவும் கபில்சிபல் கூறியுள்ளார்.
வலிமையான குஜராத் மாநிலத்தை உருவாக்கியுள்ளதாக மோடி சொல்லி வருவதற்கு ஏற்றார் போல, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடைப்பெற்றுள்ளதாக தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், தமிழகம், கேரளம், கர்நாடகாவில் காணப்படுகிற அளவுக்கு கூட பொறியியல் கல்லுரிகள் குஜராத்திற்கு வராததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத்தில் தகவல் தொழில் நுட்பம், உயிரி தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது விளைவாக இந்த அளவிற்க்கு மாற்றங்கள் உருவாகியள்ளன என்று மோடியால் எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா என்றும் கேள்வி எழுப்பியள்ளார்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு நாட்களைக் கடததி வருவதாக மோடி குற்றம் சாட்டி வருவதற்கு பதிலளித்துள்ள கபில்சிபல், உச்ச நீதிமன்ற வழிக்காட்டுதல் முறைப்படி தான் மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 19 குற்றவாளிகள் தூக்குத் தண்டணைக்காக காத்திருந்ததாக குறிப்பிட்ட அவர், ஏன் அவர்களூக்குத் தூக்குத் தண்டணை நிறைவேற்றப் படவில்லை என்பதை மோடி விளக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.