போலி என்கவுண்டர் தொடர்பாக பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதில் அளிக்க கால அவகாசம் கேட்டுக் கொண்டதால் தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின்போது போலி என்கவுண்டரில் சொராபுதீன் சேக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி பேசியது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை முதல்வர் நரேந்திர மோடி மீறியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையிலான முழு ஆணையமும் ஆய்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்குள் சம்பவம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே மோடியின் வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக சில மணி நேரங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மோடி தரப்பில் கடந்த 4ஆம் தேதி நடந்த நிகழ்வு தொடர்பான பதில் இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடியின் பதில் மனுவை ஆணையம் பரிசீலித்த பின்னர் மோடி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.