காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று குஜராத் மாநிலம் சூரத்தில் தமது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
சூரத்தில் நடைப்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கென்று 120 ஆண்டுகால வரலாறு உள்ளது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற மிகப் பெரிய தலைவர்களின் தலைமையில் வளர்ந்த கட்சி அது என்று கூறினார்.
நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலாவது மத ரீதியான அவமரியாதையை இதுவரை செய்தது உண்டா என்று கேள்வி எழுப்பிய பிரதமர், இந்துக்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்ற நரேந்திர மோடியின் குற்றச் சாட்டைக் கடுமையாக மறுத்தார்.
காங்கிரஸ் கட்சி தவறான கட்சி என்பது போல சிலர் சாயம் பூச பார்க்கின்றனர் என்று கூறிய பிரதமர், அவ்வாறு கூறுபவர்களின் பயத்தையும், நிச்சயமற்ற எதிர்காலமும் தான் அவர்களின் நடவடிக்கையில் இருந்து தெரியவருவதாக கூறினார். இவ்வாறு நடந்து கொள்வது அவர்களின் பலத்தைக் காட்டவில்லை, மாறாக அவர்களின் பலவீனத்தைத் தான் காட்டுகிறது என்று மறைமுகமாக பா.ஜ.க.வை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கியுள்ளார்.
நாட்டை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த துடிப்பது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நல்ல அறிகுறியாக இருக்காது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். குஜராத் மாநிலத்தைப் பொறுத்த மட்டில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுவதாக சொல்லிவரும் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டை பிரதமர் கடுமையாக மறுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்களை நாட்டில் செயல்படுத்தி வருவதில் குஜராத் மாநிலம் பயன்பெற்று உள்ளதாக தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் மாநிலத்தில உள்ள கிராமங்களின் நிலையை மாற்ற விரும்புவதாகவும், வளர்ச்சி பெற்றதனை எடுத்துக்காட்டும் விதமாக கிராமங்களை உருவாக்க விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கல்வியில் இன்னும் குஜராத் பின்தங்கியே உள்ளதாக தெரிவித்த பிரதமர், மூன்றில் ஒரு பங்கினர் இன்னும் கல்வியறிவு பெறாமல் உள்ளதாகவும், கல்வியைப் பொறுத்த வகையில் குஜராத்தில் கிராமங்களை மட்டும் அல்ல பல நகரப் பகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.
சர்தார் சரோவர் திட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதற்கு காரணம் மத்திய அரசு தான் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
வரும் 11,16 தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப் பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் 3 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் 183 வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றனர். வரும் 23 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தை 11 -ஆம் தேதி மீண்டும் குஜராத்தில் மேற்கொள்ள உள்ளார்.