மாநிலங்களவையில் அணுசக்தி ஒப்பந்தம் மீதான விவாதத்தின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்காக, அவர் மீது பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா உரிமை மீறல் தாக்கீது கொடுத்துள்ளார்.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்சனையை சின்ஹா கொண்டு வந்தார். அப்போது அவைத் தலைவர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் பி.ஜே.குரியன், சின்ஹா அளித்த தாக்கீது அவைத் தலைவரின் ஆய்வில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்றபோது, "1991-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தபோது ஜப்பானுக்குச் சென்றார். ஆனால் அவரால் ஜப்பான் நிதியமைச்சரைக் கூட சந்திக்க முடியவில்லை,'' என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
பிரதமரின் இந்த விளக்கம் உண்மைக்கு மாறானது என்று குறிப்பிட்ட யஷ்வந்த் சின்ஹா, தவறான தகவலை அளித்த பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதாக கூறினார்.