எதிரியின் ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்து தடுத்து அழிக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக நடத்தி முடித்தது!
கடந்த 2 ஆம் தேதி விண் இலக்கை ஏவுகணையைக் கொண்டு தாக்கி அழிக்கும் சோதனையைத் தொடர்ந்து இன்று ஒரிசா மாநிலத்தையடுத்து வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை தளம் 3ல் இருந்து இந்தியாவின் பிருதிவி ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட ஏவுகணை 11 மணிக்கு தாக்குதல் ஏவுகணையாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சில நொடிகளில் 4வது ஏவுகணைச் சோதனை தளத்தில் இருந்து அதிவேக (சூப்பர்சானிக்) இடைமறிக்கும் ஏவுகணை ஏவப்பட்டது.
பிருதிவி ஏவுகணையை விண்ணிலேயே இடைமறித்து அதிவேக ஏவுகணை தாக்கி அழித்தது. இந்தச் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் விண் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.
வீலர், சண்டிப்பூர் தீவுகளை ஒட்டியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த 5,800 பேர் வெளியேற்றப்பட்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இடைத்தூர ஏவுகணை சோதனை மைய வட்டாரங்கள் தெரிவித்தது.
தாக்குதல் ஏவுகணையாக தொடுக்கப்பட்ட பிருதிவி ஏவுகணை, 200 முதல் 250 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று துல்லியமாகத் தாக்கவல்லதாகும். அதனை விண்ணில் எந்த உயரத்தில் இடைமறித்து தாக்கி அழிக்க வேண்டுமோ அந்த முன் அளவுகளின் படி இடைமறித்து தாக்கும் ஏவுகணை துல்லியமாகச் சந்தித்து பிரித்வியுடன் மோதி அழித்தது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.