Publish Date: Thu, 06 Dec 2007 (14:53 IST)
Updated Date: Thu, 06 Dec 2007 (14:52 IST)
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி சமாஜ்வாதி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று நாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவை இன்று கூடியவுடன் அவைக்கு நடுவில் வந்து குழுமிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர்.
இதை எதிர்த்து முழக்கமிட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உடனடியாக ராமர் கோவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது எழுந்த சமாஜ்வாதி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன், அயோத்தி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்தின் ஆயுட்காலம் 42 முறை நீட்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
இதைக் கண்டித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி அவையின் மையத்திற்கு வரத்தொடங்கினர்.
இதையடுத்து முதலில் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும், இறுதியாக நாள் முழுவதும் அவை தள்ளிவைக்கப்பட்டது.
Webdunia
Publish Date: Thu, 06 Dec 2007 (14:53 IST)
Updated Date: Thu, 06 Dec 2007 (14:52 IST)