பள்ளி ஆசிரியர்களை அவர்களின் வேலை நாட்களில் தேர்தல் பணியாற்ற அனுப்புவதற்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, ஹெச்.எஸ். பேடி அகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேலை நாட்களில் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது உண்மைதான் என்று குறிப்பிட்டனர்.
முன்னதாக, டெல்லியில் உள்ள சில பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளுக்கு வருமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிடுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறியிருந்தனர்.
இதற்கு பதிலளித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த மனுவில், பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் தேர்தல் பணிகளைச் சமாளிப்பது கடினம் என்று கூறியிருந்தது. தேர்தல் நாளன்று பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிப்பதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேலை நாட்களில் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்குச் செல்லத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது.