உணவு விடுதிகளில் உள்ள பார்களில் உதவியாளர்களாகப் பெண்கள் பணியாற்ற எந்தத் தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, ஹெச்.எஸ்.பேடி ஆகியோர் அடங்கிய அமர்வு, 21 வயத்திற்கு மேற்பட்ட பெண்கள் மதுக் கூடங்கள், உணவு விடுதிகளில் உள்ள பார்களில் பணியாற்ற சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தனர்.
அரசியல் சட்டப்படி யாரையும் பால், இனம், மதம் உள்ளிட்ட வேறுபாடு காட்டி பணியிலிருந்து ஒதுக்கிவைக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முன்னதாக அனுஜ் கார்க் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், பார்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் ரீதியான இன்னல்களுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பார்களில் பெண்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து இவர் மேல் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.