ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழக நீதிமன்றம் தனது விசாரணையை துவங்கியுள்ளது.
உ.பி. மாநிலம் ரேபரேலியில் உள்ள ம.பு.க. நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி வன்ஸ்ராஜ் சிங் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உத்தரபிரதேசக் காவல்துறை உதவி ஆய்வாளர் ஹனுமன் பிரசாத் தனது முதல் சாட்சியத்தை பதிவு செய்தார்.
மசூதி இடிப்பு நிகழ்வில் ஈடுபட்ட நபர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் முழக்கமிட்டதற்காக பா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரின் மீது, ஹனுமன் பிரசாத் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பிரசாத்,''கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அயோத்தியில், ராமஜென்ம பூமிப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி கங்கா பிரசாத் திவாரியின் புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.
பிரசாத்தைக் குறுக்கு விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கதியார், பாரதிய ஜனசக்தி கட்சி தலைவர் உமா பாரதி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் அஷோக் சிங்வால், கிரிராஜ் கிஷோர், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக, கலவரத்தைத் தூண்ட முயற்சித்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் மதங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் நீதிமன்றம் குற்றச்சாற்றுகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் அடுத்த சாட்சியான மத்திய ரிசர்வ் காவல்படை அதிகாரி ஆர்.கே.சாமியின் சாட்சியத்தை வருகிற 16 ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.