மக்களவையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் விவகாரத்தை எழுப்ப முயற்சித்து அமளியில் ஈடுபட்டதால் அவை 40 நிமிடங்கள் தள்ளிவைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு எழுந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, மதிய உணவு இடைவேளையை ரத்துசெய்துவிட்டு பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் நலன்கள் தொடர்பான சட்டவரைவு பற்றி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது அதிரடியாக எழுந்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் விவகாரமும் அவசரம்தான் என்று கூறியதுடன், அவையின் கவனத்தை திசை திருப்பும் வகையில் கூச்சலிட்டார். இதற்கு மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சிலர் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்த மம்தா பானர்ஜி எதற்காக அவைக்கு வந்தார் என்று அவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தனர்.
இதையடுத்து அவையை 40 நிமிடங்களுக்கு தள்ளிவைத்து மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
முன்னதாக நந்திகிராம் விவகாரம் குறித்து மக்களவையில் வாக்கெடுப்பில்லாத விவாதம் நடந்து முடிந்து விட்டது என்பதும், நந்திகிராம் வன்முறைகளைக் கண்டித்து தனது பதவிவிலகல் கடிதத்தை பிரதமருக்கும், அதனுடைய நகலை மக்களவைத் தலைவருக்கும் அனுப்பிவிட்டதாக மம்தா பானர்ஜி அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.