இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் நமது நாட்டின் வளர்ச்சிக்கான கூறுகள் என்று பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டிய பல்வேறு விடயங்களுக்கு முரணான அம்சங்கள் அதே ஒப்பந்தத்தில் உள்ளன என்று மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் சீதாராம் யச்சூரி கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையில் அவர் தெரிவித்த குறிப்பிடத்தக்க விவரங்கள் வருமாறு:
அமெரிக்கா இயற்றியுள்ள ஹென்றி ஹைட் சட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகள், எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனைகளை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை அமெரிக்காவின் எதிர்கால அதிபர்களுக்கு அளிக்க வகை செய்கின்றன.
அந்த நேரத்தில், இந்தியாவிற்கு வழங்கப்படும் எரிபொருளை நிறுத்துவதுடன், அணு உலைகளையும் அவற்றிற்கான தொழில் நுட்பங்களையும் அமெரிக்கா திரும்பப் பெறுவதற்கும் ஹைட் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்தச் சிக்கல், அணு உலைகளுக்கு தடையில்லாமல் எரிபோருள் கிடைக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அளித்த உறுதியை பொய்யாக்குவதுடன், அதிநவீன அணு எரிபொருள் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் கிடைக்கவிடாமல் செய்யும்.
மேலும், பிரதமர் உறுதியளித்தபடி இருதரப்பு நல்லுறவு சார்ந்த அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பு விதிகள்தான் நம்முடையை அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்தும்.
இதனால், அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்த வடிவமும் நமது நலன்களுக்கு எதிராக உள்ளது. நமது நாட்டில் ஏராளமாக உள்ள தோரியத்தைப் பயன்படுத்தி செயல்படுத்த முடியக்கூடிய அணுசக்தித் திட்டங்களைக் கூட இந்த ஒப்பந்தம் தடை செய்துவிடும்.
எப்படியென்றால், தோரியத்தை யுரேனியமாக மாற்றும்போது கிடைக்கக் கூடிய புளுட்டோனியத்தை வைத்து அணு ஆயுதம் தயாரிக்க முடியும். இதனால், புளுட்டோனியம் தயாரிப்பு சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்ற அடிப்படையில், நமது அணுசக்தி திட்டங்கள் அனைத்திற்கும் தடை விதிக்க முடியும்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுடன் நல்லுறவு வைத்துக் கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜான் ஹாவார்ட், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலையிலிருந்து நமது பிரதமர் மன்மோகன் சிங் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் சீதாராம் யச்சூரி.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ.க. உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி, இடதுசாரிகளுக்கு ஒப்பந்தத்தை எதிர்ப்பதைவிட அரசுக்கு ஆதரவு தருவதுதான் முக்கியம் என்றார்.
அதற்கு பதிலளித்த யச்சூரி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு அமல்படுத்தாமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையே தவிர அரசைக் கவிழ்ப்பது அல்ல என்றார்.