நமது நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் என்ற குற்றச்சாற்றை மத்திய அரசு மறுத்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் எம்.ஏ.ஏ. ஃபாத்மி, தேசிய அளவில் ஆசிரியர் வருகை விகிதம் 80 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது என்று அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.
தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் வருகையை உறுதி செய்யும் வகையில் மாநில அரசுகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.