2000 ஆவது ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது!
டெல்லி செங்கோட்டை தாக்குதலை விசாரித்த கீழ் நீதிமன்றமும், அதன் தீர்ப்பின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பிலும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-ஈ-தயீபா இயக்கத்தைச் சேர்ந்தவனாகக் கூறப்படும் மொம்மது ஆரிஃப் என்றழைக்கப்படும் அஷ்·பாகிற்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நாசிர் அகமது காசித், அவருடைய மகன் ஃபரூக் அகமது காசித் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மொஹம்மது ஆரிஃப் தாக்கல் செய்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர், பி. சதாசிவம் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு விளக்கமளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு தாக்கீது அனுப்பியது.
செங்கோட்டை மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான சதித் திட்டத்தில் தான் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்றும், விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தவறிழைத்துவிட்டதாகவும் தனது மனுவில் கூறியுளார்.