இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் சமையல் எரிவாயுக் குழாய் திட்டத்திலும், ஈரான் நிறுவனத்துடன், கூட்டாண்மை வைத்துக்கொள்ள இந்திய நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததிலும் அமெரிக்க சார்பு நிலையை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாற்றியுள்ளது!
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவருமான சீதாராம் யச்சூரி, இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயுக் குழாய் திட்டத்தில் அமெரிக்க ஆதரவு போக்கை கடைபிடிக்க மாட்டோம் என்கின்ற உறுதிமொழியை பிரதமரிடம் இருந்து பெறுவோம் என்று கூறினார்.
"இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் மட்டுமின்றி, ஈரான் நிறுவனத்துடன் இந்தியாவின் தனியார் நிறுவனம் ஒன்று கூட்டாண்மை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு எதிராக பாரத அரசு வங்கி ஆலோசனை அளித்தது தொடர்பாகவும், பிரதமரிடம் விளக்கம் கோருவோம் என்று சீதாராம் யச்சூரி கூறினார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீது நாளை மாநிலங்களவையில் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், அதுபற்றி கருத்து தெரிவித்த சீதாராம் யச்சூரி, நமது அணு உலைகளுக்கு தொடர்ந்து எரிபொருள் வழங்குவது, பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு சுழற்சி செய்யும் உரிமை ஆகியன குறித்து தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை அரசு பதிலளிக்கவில்லை என்றும் கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம் தனது மிகப்பெரிய திட்டத்திற்கு இந்தியாவை தனது கருவியாக பயன்படுத்த அமெரிக்கா முயன்று வருவதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த 12 உறுதிமொழிகளையும் பிரதமர் நிறைவேற்ற வேண்டும் என்று சீதாராம் யச்சூரி கேட்டுக் கொண்டார்.