பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதற்கு 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், தனது அமைச்சகம் உருவாக்கியுள்ள 2007-2012 ஆம் ஆண்டுகளுக்கான 11 ஆவது பாதுகாப்பு ஐந்தாண்டுத் திட்டம் பற்றிக் குறிப்பிட்டார்.
''இத்திட்டத்தில், வருவாய், முதலீட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதத் தொழிற்சாலை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுடன் பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டம் தற்போது நிதியமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிறைவேற்றப்படாத பல்வேறு விடயங்கள் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு எடுத்துவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் நிறைவேறாமல் உள்ளதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறைக்கு நிதியைக் கையாளும் அதிகாரங்களை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.