அலாஸ்காவில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புஅமைச்சர் ஏ.கே. அந்தோணி இத்தகவலைத் தெரிவித்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க ராணுவத்தினரை இந்தியாவிற்கு அழைத்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
''இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளின் மூலம் நமது ராணுவத்தின் திறன் அதிகரிக்கும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் எல்லா முறைகளையும் அறிந்துகொள்ள முடியும். இதனால், பேரழிவு காலங்களிலும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும்போதும் ராணுவத்தினரின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த முடியும்'' என்றும் அவர் கூறினார்.
நிலமுறைகேடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அந்தோணி, ''பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலங்களை வணிக ரீதியான பயன்பாடுகளுக்காக தனியாருக்கு வழங்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனால், அந்த நிலங்களை சிலர் முறைகேடாகப் பயன்படுத்துவதாகச் புகார்கள் வந்துள்ளன.
இப்புகார்கள் நிரூபிக்கப்பட்டால் பாதுகாப்புச் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்'' என்றார்.