கல்வித் துறையில் தரமான, ஆக்கபூர்வமான மேம்பாடுகளைக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது மத்திய மனிதவள மேம்பாட்டுஅமைச்சக இணையமைச்சர் புரந்தேஸ்வரி எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், ''11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியளவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால் தெரிவிக்க இயலாது. ஆனால், கல்வித் துறையில் தரமான, ஆக்கபூர்வமான மேம்பாடுகளைக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
''தொடக்கநிலைப் பள்ளிகளை முதல்நிலைப் பள்ளிகளாக வேகமாகத் தரமுயர்த்துவது, மாவட்ட வாரியாக மொத்தம் 6,000 தரமான மாதிரிப் பள்ளிகளை உருவாக்குவது, பள்ளிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களை மேம்படுத்துவது, பெண்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவது, மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் 30 மில்லியன் குழந்தைகளை கூடுதலாகப் பள்ளிகளுக்கு அழைத்து வருவது ஆகிய திட்டங்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
உயர் கல்வியைப் பொறுத்தவரை ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ.எம்.கள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய அரசு கல்வித் துறைக்காக 2007-2008 ஆம் ஆண்டில் ரூ.28,671 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் 2007 ஏப்ரல் முதல் 2007 செப்டம்பர் வரை ரூ.8,258 ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் புரந்தேஸ்வரி கூறியுள்ளார்.