உலகம் முழுவதும் பயங்கரவாதிகள், மதஅடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு இலக்காகிவரும் பாரம்பரியம் மிக்க இடங்களைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.
புதுடெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், மதவாதம், பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகளுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய கட்டடங்கள் அவ்வப்போது இலக்காகி அழிந்து விடக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்த புத்தர் சிலை (பாமியன்) தகர்க்கப்பட்ட நிகழ்வு இதற்கு ஒரு உதாரணமாகும் என்று கூறிய பிரதமர், தீயசக்திகளுக்கு எதிராக நடக்கும் மோதல் நேரத்திலும் கூட புகழ்மிக்க இடங்களுக்கு உரிய வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அண்மைக் காலமாக பாரம்பரிய சின்னங்களுக்கு பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த காலங்களில் பெருமளவிலான மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட சின்னங்களை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதை உலகம் முழுவதும் வலியுறுத்த வேண்டும் என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை பாரம்பரியச் சின்னங்களை பாதுகாப்பதில் கவனமுடன் இருந்து வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் கலாச்சார சொத்துக்களுக்கு இயற்கையாலும், மனிதனாலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.