குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தை ஆளும் பாரதீய ஜனதாவினர் “அச்சம் மற்றும் மரண வியாபாரிகள்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
சிக்லி எனும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜமன்பாடா கிராமத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா, பயங்கரவாத்த்தை தாங்கள் ஆட்சியில் இருந்தபோது கட்டுப்படுத்தியதாக பா.ஜ.க. கூறுவது உண்மையல்ல என்று கூறியுள்ளார்.
“பாரதிய ஜனதா ஆட்சியிலிருந்தபோதுதான் ஜம்முவிலுள்ள ரகுநாத் கோயிலிலும், காந்தி நகரிலுள்ள அக்ஷார்தாம் கோயிலிலும், இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீதும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறினார்.
“அது மட்டுமின்றி, பா.ஜ.க. ஆட்சியிலிருந்தபோதுதான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. விமானத்தையும், பயணிகளையும் மீட்க நமது சிறையிலிருந்த பயங்கரவாதிகளை அன்றைய அயலுறவு அமைச்சரே ஆஃப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றார்” என்று சோனியா சாடியுள்ளார்.
குஜராத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க. பறைசாற்றுவதாகவும், ஆனால் அப்படி எந்த முன்னேற்றமும் அம்மாநிலம் கண்டுள்ளதாகத் தெரியவில்லை என்றும் சோனியா கூறினார்.