'சிதிர்' புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்திற்கு உதவியாக ஒரு மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இன்று வங்கதேசத்திற்குச் செல்லவிருக்கும் மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த உதவியை வங்கதேச அதிகாரிகளிடம் வழங்குகிறார்.
இதுதவிர பால், கோதுமை, அரிசி உள்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்கனவே இந்தியா அனுப்பியுள்ளது. சிறப்பு உதவியாக வங்கதேசத்திற்கு மட்டும் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
வங்கதேசத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 கடற்கரை கிராமங்களை தத்தெடுத்துக் கொள்ளவும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'சிதிர்' என்ற அதி தீவிரப் புயல் வங்கதேசத்தைத் தாக்கியபோது 15 க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரம் பேர் பலியாயினர். 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர்.