இந்தோனேசியாவின் மேற்குப் பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேத விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
சுமத்ரா தீவில் உள்ள சிபோல்கா நகரத்திலிருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து சில வினாடிகளில் 6.1 ரிக்டர் அளவுக்கு புவியின் மேற்பரப்பிலிருந்து 35 கி.மீட்டர் ஆழத்தில் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது பின்னர் 6.3 ரிக்டராக அதிகரித்தது என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நில நடுக்கங்கள் கடலுக்கடியில் ஏற்பட்டிருந்தாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. சிறிய தீவுக் கூட்டங்களில் குடியிருக்கும் மக்கள் அலறியடித்தபடி சாலைகளுக்கு ஓடி வந்தனர். சில வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.