சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க பரிந்துரை செய்த சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் வலியுறுத்த முயன்றபோது பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மக்களவையில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் முகமது சலீம், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட சச்சார் குழு அறிக்கை துரதிர்ஷ்டவசமாக இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டதுடன், அந்த அறிக்கையின் நிலை குறித்து சிறுபான்மையினர் விவகாரஅமைச்சர் ஏ.ஆர்.அந்துலே தெரிவித்த விளக்கம்பற்றி கருத்து கூற எதுவுமில்லை என்றார்.
இதையடுத்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் உறுப்பினர் தேவேந்திர பிரசாத் யாதவ், நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
அப்போது இடைமறித்த பா.ஜ.க. உறுப்பினர் மல்கோத்ரா, சச்சார் குழு அறிக்கை நாட்டை பிளவுபடுத்துகிறது என்பதால் அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். சச்சார் குழு அறிக்கையை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் அறிவித்தார்.