ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருந்துகளின் தரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ரூ.225 கோடி மதிப்பிலான புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இந்தப் புதிய திட்டத்தில், மருந்து ஆய்வு சோதனைக் கூடங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் மாநில அளவில் மருந்து தயாரிக்கும் ஆலைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள், தரக் கட்டுப்பாடுகள் ஆகியவை உலக நலவாழ்வு நிறுவனம் பின்பற்றும் விதிமுறைகள், தரக் கட்டுப்பாடுகளுடன் ஒத்துப் போகிறதா என்பதைக் கண்காணிப்பது ஆகியவையும் அடக்கம்.
புது டெல்லியில் இன்று நடந்த மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருத்துவக் கூடங்களை மேம்படுத்துவதற்கு ரூ.550 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆயுர்வேதக் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை இளநிலைக் கல்லூரிகளுக்கு ரூ. 62 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியாகவும, முதுகலைக் கல்லூரிகளுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும், மாதிரிக் கல்லூரிகளுக்கு ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகவும் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.