நமது நாட்டில் மன நல பாதிப்பினால் தற்கொலைகள் அதிகரிப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ''தேசிய குற்றப் பதிவுக் கழகத்தின் தகவல்படி 2004 ஆம் ஆண்டு 1,13,697 பேரும், 2005 ஆம் ஆண்டு 1,13,914 பேரும், 2006 ஆம் ஆண்டு 1,18,112 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதில் 1 முதல் 2 விழுக்காட்டினர் தீர்க்கமுடியாத மன நல பாதிப்பினாலும், 5 முதல் 10 விழுக்காட்டினர் சிறிய மனநலப் பிரச்சனைகளாலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்'' என்றார்.
இதைத் தடுக்க, தேசிய மன நலத் திட்டத்தின்கீழ் பொதுநல மருத்துவத்தின் ஒரு பகுதியாக மன நலச் சேவைகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை மாநில அரசுகள் மூலமாகச் செயல்படுத்த மாவட்ட மன நலத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மன நல மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளைச் செய்து தருதல், மாவட்ட மருத்துவமனைகளை நவீனப்படுத்தி மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மன நலத் திட்டத்தின் மூலம் எடுக்கப்படும்.
இதுதவிர, தற்கொலை தடுப்பு திட்டம், மன அழுத்த சிகிச்சை திட்டம், பள்ளிகளில் மனஅழுத்த ஆலோசனை மையங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார் அமைச்சர் அன்புமணி.