பெருமைமிக்க ஜனநாயக நாடான இந்தியாவின் உயர்ந்த அதிகார அமைப்பான நாடாளுமன்றம் ஆண்டுக்கு 100 நாளாவது கூட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா வலியுறுத்தினார்.
மக்களவையில் இன்று பேசிய குருதாஸ் தாஸ் குப்தா, ''நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் அதன் மாண்புக்குப் பொறுத்தமற்ற வகையில் சென்று கொண்டுள்ளன. அவைத் தலைவர்கள் குழுக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டவாறு ஆண்டுக்கு 100 நாட்களாவது நாடாளுமன்றம் கூட வேண்டும்'' என்று கவலையுடன் கூறினார்.
''ஆட்சியில் உள்ள கட்சிக்கு நாடாளுமன்றம் இயங்குவது தொந்தரவாக உள்ளதென்று நினைக்கிறேன். இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் கூட 11 நாட்கள்தான் ஒழுங்காக நடக்கவுள்ளது. மற்ற நாட்கள் மறைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதிலும், அமளியால் தள்ளி வைப்பதிலும் சென்றுவிட்டது. கடந்த 9 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான நாட்கள் நாடாளுமன்றம் கூடுவது இதுவே முதல் முறையாகும்'' என்றும் அவர் கூறினார்.
அப்போது இடைமறித்த ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், கேள்வி நேரத்திற்குப் பிறகும் கேள்வியெழுப்புவது யார் என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி எழுந்து, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் பொறுத்தமற்ற வகையில் செல்கின்றன என்ற கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இவ்வளவு குறைவான நாட்கள் கூடுவது கடந்த 9 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் தாஸ்முன்ஷி, குளிர்காலக் கூட்டத் தொடர் 5 நாட்கள் கூட நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
இறுதியில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி குறுக்கிட்டு, இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்படும் என்றார்.