இரண்டு ரயில் பெட்டிகளில் ராணுவத்திற்காக கொண்டுவரப்பட்ட வெடிபொருட்கள் காணாமல் போன விவகாரம் குறித்து பதிலளிக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் மறுத்துவிட்டார்.
கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ராணுவத்திற்காக ஜோத்பூரில் இருந்து 26 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் 2 பெட்டிகளைக் காணவில்லை என்று புகார் எழுந்தது.
இந்நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பிஜூ ஜனதா தளக்(பி.ஜ.த.) கட்சியின் உறுப்பினர் பிரஜோ கிஷோர் திரிபாதி, ரயில் பெட்டிகளில் இருந்த வெடிபொருட்களின் நிலை என்னவென்று கேள்வி எழுப்பினார்.
இது முக்கியமான பிரச்சனை என்பதால் பாதுகாப்பு அமைச்சகம் அல்லது ரயில்வே அமைச்சகம் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து எழுந்த பி.ஜ.த. கட்சியின் மற்றொரு உறுப்பினர் பட்ருஹரி மதாப், மொத்தம் அனுப்பப்பட்ட 24 ரயில் பெட்டி வெடிமருந்துகளில் 22 பெட்டிகள்தான் வந்து சேர்ந்தன என்று உறுதிசெய்து கடந்த 17 ஆம் தேதி ராணுவம் அளித்த ஃபேக்ஸ் தகவலின் நகலைக் காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர், அரசு இதற்குத் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பிறகு எழுந்த பிரசன்ன ஆச்சார்யா என்ற பி.ஜ.த. உறுப்பினர், வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்ட ரயில் நக்சலைட்டுகள் ஆதிக்கமுள்ள பகுதிகளின் வழியாக வந்துள்ளதால், அவர்களின் கைகளிலோ, தேசவிரோதச் சக்திகள், கடத்தல்காரர்கள் கைகளிளோ வெடிபொருட்கள் இருந்த பெட்டிகள் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்.
இதற்கு நடுவில் இரண்டு முறை குறுக்கிட்ட மக்களவைத் தலைவர், அரசு இதற்குத் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்றார். ஆனால், இறுதிவரை அமைச்சர் லாலு பிரசாத் பதிலளிக்கவில்லை.