டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்து அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் பதவிக்கான வயது வரம்பை 65 ஆக நிர்ணயித்து நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவைக் கண்டித்து எய்ம்ஸ் இருப்பிட மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவின் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியப் பிரிவுகள் மட்டும் வழக்கம் போல இயங்கி வருகின்றன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபற்றிக் கேட்டதற்கு, ''இது ஒரு காலவரையற்ற போராட்டமாக இருக்கும். மத்திய நலவாழ்வு அமைச்சர் அன்புமணி ராமதாசின் தன்னிச்சையான அத்துமீறும் நடவடிக்கையைக் கண்டித்து நாங்கள் போராடி வருகிறோம். எப்படியிருந் தாலும் 6 மாதத்திற்குள் ஓய்வு பெறப்போகிற மருத்துவர் வேணுகோபாலுக்கு எதிராக அவர் இந்தச் சட்ட வரைவை நிறைவேற்றியுள்ளார்'' என்று இருப்பிட்ட மருத்துவர் சங்கத் தலைவர் குமார் ஹார்ஸ் கேள்வி எழுப்பினார்.
''எய்ம்ஸ் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினமாக இருக்கும். மருத்துவர் வேணுகோபாலை அவமானப்படுத்துவதற்காக அமைச்சர் அன்புமணி இதைச் செய்துள்ளார்'' என்று எய்ம்ஸ் மருத்துவர் சங்கத் தலைவர் வினோத் குமார் கைத்தன் கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவர்களின் போராட்டத்தினால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து நிறைய பணத்தை ரயில் பயணச் சீட்டிற்காகச் செலவு செய்து வரும் நோயாளிகள் வெறுப்படைந்துள்ளனர்.