நமது நாடு முழுவதிலும் ரயில்வேக்குச் சொந்தமாக உள்ள 1575 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே இணையமைச்சர் ஆர்.வேலு, ரயில்வேக்குச் சொந்தமாக உள்ள 4.31 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 1575 ஹெக்டேர் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளில் 1.4 லட்சம் பேருக்குத் தொடர்புள்ளது. இதில் 28,530 பேரைக் கண்டுபிடித்து 500.17 ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளோம் என்றார்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு காலாவதியான சட்டங்கள் தடையாக உள்ளன. அவற்றைத் திருத்துவதற்கு குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலு, ரயில்வே நிலங்களில் சிறிய வியாபாரங்களை செய்துவரும் நபர்கள் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொண்டு செயல்படுவதால் தண்டிப்பது கடினம் என்றார்.