மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் போராட்டம் மிக மிக முக்கியமான பிரச்சனை என்பதால் அவர்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் கட்சி பேதமின்றி வலியுறுத்தினர்.
''இது மிக முக்கியமான பிரச்சனை. 240 இந்தியர்கள் எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசு இதில் தலையிட வேண்டும்'' என்று காங்கிரஸ் உறுப்பினர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
''இந்திய வம்சாவழியினர், குறிப்பாகத் தமிழர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மத்திய அரசு இதில் தலையிட வேண்டும். இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய அயலுறவு அமைச்சகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா கோரிக்கை விடுத்தார்.
அவர் மலேசியாவில் உள்ள இந்திய வம்சத்தினரின் நிலை மிகவும் பரிதாபத்திற்கும், சோகத்திற்கும் உரியது என்று குறிப்பிட்டார்.
''மலேசியாவில் இந்திய வம்சாவழியினரை பாதிக்கும் வகையில் 64 கோயில்களை மலேசிய அரசு இடித்தும், சேதப்படுத்தியும் உள்ளது'' என்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் மலைச்சாமி கூறினார்.
மேலும், இந்தப் பிரச்சனை மிக மிக முக்கியமானது. கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய வம்சாவழியினரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம்சாற்றினார்.
பா.ஜ.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினர்.
இதையடுத்து அவையின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துச் செல்வதாக அவை துணைத் தலைவர் ரஹ்மான் கான் கூறினார்.
பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி, இந்த விவகாரம் மிகவும் முக்கியம் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.